×

ரமலானில் ஒரு புதிய மனிதனாக..!

பன்னாட்டளவில் புகழ்பெற்ற மார்க்க அறிஞர் மௌலானா அகார் முஹம்மத் அவர்கள் ரமலான் மாதத்தில் இறைநம்பிக்கையாளர் எப்படி  நடந்து கொள்ள வேண்டும் என்று சில வழிகாட்டுதல்களைத் தந்துள்ளார். ரமலான் மறுமை வியாபாரிகளின் பருவ காலம். பருவ காலத்தில் உலக வியாபாரிகள் எப்படி, எவ்வாறு மும்முரமாக, முழு மூச்சாக வியாபாரத்தில் ஈடுபடுவார்கள் என்பதை நாம் நன்கு அறிவோம். அதே போன்றுதான் நம்பிக்கையாளர்கள் ரமலான் காலத்தில் மறுமை வியாபாரத்தில் முனைப்புடன் ஈடுபட வேண்டும்.ஆரம்பமாக ரமலானுக்கு தயாராகும் வகையில்  மனிதர்களுடனான உறவுகளை விரைந்து சீர்செய்துகொள்ள வேண்டும். யாருடனும் எவருடனும் பகைமை இருக்கும் நிலையில், சண்டை, சச்சரவுகள் நிலவும் நிலையில், வீணான முரண்பாடுகளும் மோதல்களும் காணப் படும் நிலையில் இந்த ரமலானை நாம் சந்திக்கலாகாது. வெறுப்பு, கோபம், அதிருப்தி, பகைமை, பொறாமை, தப்பெண்ணம் முதலான அசுத்தங்களைக் களைந்து சுத்தமான உள்ளத்தோடு ரமலானைச் சந்திக்க வகைசெய்வோம். அடுத்து, வெறும் வாயும் வயிறும் நோன்பு நோற்கும் ரமலானாக மட்டுமின்றி நாவு, கண்கள், காதுகள் உட்பட எல்லா உறுப்புகளும் நோன்பு நோற்கின்ற ரமலானாக இந்த ரமலான் அமைய வேண்டும் என்பதை உத்தரவாதப்படுத்துவோம். இந்த வகையில் பொய், புறம் பேசுவதில்லை; கோள் சொல்லுவதில்லை; தர்க்க, குதர்க்கங்களில் ஈடுபடுவதில்லை; சண்டை, சச்சரவுகளில் ஈடுபடுவதில்லை; யாருடைய உள்ளத்தையும் நோகடிப்பதில்லை; புண்படுத்துவதில்லை; வீண் பேச்சுக்கள் பேசுவதில்லை; வீணான காரியங் களில் பங்கேற்பதில்லை; அரட்டை அடிப்பதில்லை; வீணாக இரவில் விழித்திருப்பதில்லை; பகலில் அதிகம் தூங்குவதில்லை. மொத்தத்தில் நோன்பின் பயனைக் கெடுக்கும் எந்தவொரு செயலிலும் ஈடுபடுவதில்லை என்று உறுதி பூணுவோம். குறிப்பாக ரமலான் படைப்புகளுடனான உறவைக் குறைத்து படைப்பாளனுடனான உறவை கூட்டிக்கொள்ள வேண்டிய ஒரு காலம் என்ற வகையில் தொலைக்காட்சி, வானொலி, தொலைபேசி, சமூக வலைத்தளங்கள் முதலானவற்றுடனான தொடர்பை அறுத்துக் கொள்வோம்; குறைந்தபட்சம் குறைத்துக் கொள்வோம். தவிர்க்க முடியாத நிலையில் அத்தியாவசிய தேவைகளுக்காகவும் ஆன்மிகத் தேவைகளுக்காகவும் மாத்திரம் மிகக் கவனமாக இவற்றை பயன்படுத்துவோம்.மேலும், நல்லோர் வழிநின்ற நமது முன்னோர்கள் ரமலான் வந்துவிட்டால் தமது முழுக்கவனத்தையும் குர்ஆனில் குவிப்பார்கள். நபித்தோழர் உஸ்மான்(ரலி) ரமலானில் தினமும் ஒரு முறை குர்ஆனை ஓதி முடிப்பார்கள். ரமலானில் இமாம் ஷாபிஈ, இமாம் அபூ ஹனிபா ஆகியோர் அறுபது தடவை குர்ஆனை ஓதி முடிப்பார்கள். நாமும் இந்த ரமலானில் குர்ஆன் ஓதுவதை நமது முதல் தர அமலாக அமைத்துக் கொள்வோம். பல முறை குர்ஆனை ஓதிமுடிக்க முயற்சி செய்வோம். குறைந்த பட்சம் ஒவ்வொரு நாளும் அதன் சில வசனங்களையாவது கற்க முயல்வோம். யார் ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வணங்குகின்றாரோ அவர் முன்செய்த பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும் என்ற நபி வாக்கை மனதிற் கொண்டு, ஐங்காலத் தொழுகைகளை ஜமாஅத்தோடு தொழுவதோடு உபரித் தொழுகைகளையும் நிறைவேற்றுவோம்.‘நபி (ஸல்) அவர்கள் ரமலானில் வேகமாக வீசும் காற்றை விட அதிகமாக அள்ளி, அள்ளிக் கொடுப்பார்கள்; தர்மம் செய்வார்கள். எனவே, நாமும் எல்லா வழிகளிலும் வகைகளிலும் தர்மம் செய்வோம்; உற்றார், உறவினர்கள், அண்டை, அயலவர்கள், ஏழை, எளியவர்கள் என எல்லோருக்கும் உதவுவோம். ரமலானை அடைந்தும் அதில் பாவமன்னிப்பைப் பெறத் தவறிய துர்பாக்கியவான்களாக நானோ நீங்களோ ஆகிவிடக்’கூடாது.ஒரு புதிய மனிதனாக மாற, ஒரு புதிய பாதையில், ஒரு புதிய பயணத்தைத் தொடர இந்த ரமலான்  நம் ஒவ்வொருவருக்கும் துணை நிற்கட்டும்.’ இந்த வழிகாட்டுலை மனத்தில்கொண்டு ரமலான் மாதத்தை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்வோம்.- சிராஜுல்ஹஸன்…

The post ரமலானில் ஒரு புதிய மனிதனாக..! appeared first on Dinakaran.

Tags : Maulana Agar Muhammad ,
× RELATED சொல்லிட்டாங்க…